![bus-auto collision near villupuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/6SrLpf-OZv-XgJGLM8FEX7MoVCbj5jXZFtk-CE_1R0A/1641357371/sites/default/files/inline-images/dsgtet.jpg)
விழுப்புரத்தில் இறந்த பாம்பை சாலையில் தூக்கி வீசியதில் அரசு பேருந்தும் ஆட்டோவும் மோதி ஏற்பட்ட விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் அருகே சென்னை நெடுஞ்சாலையில் சிறுவர்கள் சிலர் இறந்த பாம்பை நடு சாலையில் வேண்டுமென்றே போட்டதாக கூறப்படுகிறது. சென்னையிலிருந்து டன் கணக்கில் இரும்பு உருளைகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி வந்துகொண்டிருந்த லாரியின் முன்னே சிறுவர்கள் இறந்த பாம்பை போட்டுள்ளனர். இதனைக்கண்டு பதற்றமடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டு லாரியை நிறுத்த முற்பட்டுள்ளார் .அப்பொழுது லாரியில் ஏற்றப்பட்டிருந்த இரும்பு உருளை ஒன்று புரண்டு நடு ரோட்டில் விழுந்தது. அந்த நேரத்தில் லாரியின் பின்னே வந்துகொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம் அந்த இரும்பு உருளையின் மீது ஏறியதில் பேருந்து தடுமாறி சாலையின் எதிர்புறமாகச் சென்று அவ்வழியே சென்ற ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ தலைகீழாகக் கவிழ்ந்தது. ஆட்டோ ஓட்டுநரும் பேருந்திலிருந்த 30 க்கும் மேற்பட்ட பயணிகளும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.