பரமத்தி வேலூர் காவல் உட்கோட்டத்தில், அடுத்தடுத்த நாட்களில் உணவக உரிமையாளர், விவசாயி வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் 75 பவுன் நகைகள், 9.15 லட்சம் ரூபாயைத் திருடிச் சென்ற சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ். விவசாயியான இவர், செப். 14ம் தேதி, வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்றிருந்தார். வழிபாடு முடிந்து மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பெயர்க்கப்பட்ட நிலையிலிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். வீட்டில் இருந்த பீரோ திறந்து இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகைகள், 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு இந்த துணிகரச் செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலகவுண்டன்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், திருட்டு நடந்த வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். விரல் ரேகை நிபுணர்கள், நிகழ்விடத்தில் பதிவாகி இருந்த தடயங்களைப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செப். 13ம் தேதி, குப்புச்சிபாளையத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 60 பவுன் நகைகள், 9 லட்சம் ரூபாயைத் திருடிச் சென்றனர்.
பரமத்தி வேலூர் காவல் உட்கோட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த துணிகர திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? அல்லது வேறு வேறு கும்பலா? என்றும், பூட்டிய வீடுகளைக் குறிவைத்துத் திருடும் கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவ இடம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் காவல்துறையினர் துப்புத் துலக்கி வருகின்றனர்.