சாலைகளில் பாலம் கட்டுவதற்கான டெண்டர் கோரிய விண்ணப்பத்தை ஊரடங்கு நேரத்தில் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நபார்டு மற்றும் ஊரக சாலைகள் - சேலம் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் லட்சுமி கட்டுமான நிறுவனம் தரப்பில், அதன் இயக்குநர் வீரகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளில் பாலங்கள் அமைப்பதற்காக, சேலம் நபார்டு மற்றும் ஊரக சாலைகள் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் டெண்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில், ஆன்லைன் மூலம் டெண்டர் கோரும் விண்ணப்பத்துடன், வங்கி வரைவோலை விவரங்களை மே 7-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், டெண்டருக்கு விண்ணப்பித்த நிலையில், வங்கி வரைவோலை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய முடியாத நிலையில், டெண்டர் கோரிய எங்களது விண்ணப்பம் நிகாரகரிக்கப்பட்டுள்ளது. அதனால், டெண்டர் தொடர்பாக இறுதி முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தின் டெண்டர் கோரிய விண்ணப்பத்தை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, டெண்டர் தொடர்பான இந்த வழக்கில், இறுதித் தீர்ப்பை வைத்தே முடிவெடுக்க வேண்டும். வழக்கு தொடர்பாக நபார்டு மற்றும் ஊரக சாலைகள் - சேலம் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.