வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் என்கிற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 500க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக இருப்பவர் சீனுவாசன்.
பள்ளியின் தலைமையாசிரியர் தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக இருப்பார். தலைவராக பிள்ளைகளின் பெற்றோர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக ஓம்பிரகாஷ் என்பவர் உள்ளார். கடந்த வாரத்தில் ஓம்பிரகாஷ், கல்வித்துறைக்கு அனுப்பிய புகாரில், வகுப்பறைக்கு பெஞ்ச் செய்கிறேன் என்று பிடிஏ சங்க பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டு போலியாக பில் தயாரித்துள்ளார். இதுப்பற்றி கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல மறுக்கிறார். பள்ளி மாணவ – மாணவிகளிடம் காரணமே கூறாமல் பணம் வசூலிக்கிறார், டிசி வழங்கவும் பணத்தை வாங்கினார் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை விசாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், ஆகஸ்ட் 1ந்தேதி பள்ளிக்கு நேரடியாக சென்றுள்ளார். அங்குள்ள சக ஆசிரியர்கள், தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்தே 3 நாட்கள் ஆகிறது என பதிலளித்துள்ளனர். இதில் அதிர்ச்சியானவர். தலைமையாசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்றால் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமே, ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
பின்னர் தலைமை ஆசிரியர் சீனிவாசன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்ததால் அவரை முதல்கட்டமாக சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Published on 02/09/2018 | Edited on 02/09/2018