Skip to main content

சூழல் தெரியாத சூழல் அமைச்சர்! மக்கள் கருப்புக் கொடி போராட்டம்

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து கொண்டே சூழலை பற்றி அவருக்கு தெரியவில்லையே என்று அமைச்சர் கருப்பணனை அவர் தொகுதியான பவானி மக்களே கேள்வி எழுப்புகிறார்கள். 

 

ஈரோடு மாவட்டம் பவானி  ஒன்றியம் ஆண்டிகுளம்,தொட்டிபாளையம், காடையம்பட்டி, செங்காடு, குளத்துதோட்டம், புதுக்காடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான  சாய, சலவை பட்டறைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலைகளிலிருந்து எவ்வித சுத்தகரிப்பும் செய்யாமல் சாய, விஷ கழிவு நீர் அப்படியே  வெளியேற்றப்பட்டு அது பவானி மற்றும் காவிரி ஆறுகளில் கலக்கிறது. இதனால் ஆற்று நீர் விஷ கழிவு கெமிக்கல் நீராக மாறி வருவதாக பவானி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

 

k

 

 இந்நிலையில் தமிழக அரசின் பங்களிப்போடு பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஒரு இடத்தை  தேர்வு செய்து அங்கு கட்டுமான பணிகள் செய்து வருகிறார்கள். இந்த பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்ககூடிய  இடம் பொதுமக்கள் வாழும் குடியிருப்புகள், பள்ளிகள், விவசாய விளைநிலங்கள், நீர் நிலைகள் உள்ள இடம். ஆகவே இங்கு அமைக்க கூடாது என்று  பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி இது முரணானது பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது.  இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கும்.  ஆகவே  மாற்று இடத்தில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது தொடர்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எதுவும்  எடுக்காமல் இருப்பதால் வருகிற சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த  போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி" கடந்த  பல ஆண்டுகளாக சாயக்கழிவு நீரை வெளியேற்றி நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களை நாசப்படுத்தி விட்டனர். இப்போது பொதுசுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கிறார்கள். அனால் இந்த பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடமானது குடியிருப்புகள், விவசாய விளைநிலங்கள், பள்ளி ஆகியவை அமைந்துள்ள இடமாகும். 

 

எல்லாவற்றிக்கும் மேலாக நீர் நிலைகளில் இருந்து குறைந்தது 5 கிலோ மீட்டர் தொலைவில் தான் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே பவானி, காவிரி என இரண்டு ஆறுகள் ஓடுகின்றது. காடையம்பட்டியில் ஒரு  ஏரி உள்ளது. ஏற்கனவே சாயக்கழிவு நீரால் அந்த பகுதியில் கேன்சர் பாதிப்பு காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் அங்கு இறந்துள்ள நிலையில் தற்போது குடியிருப்பு பகுதியிலேயே பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பது என்பது ஏற்புடையது அல்ல. 

 

 பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க முறையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. எனவே பொதுசுத்திகரிப்பு நிலையம் கட்ட மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். இது தொர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய அறிவிப்பு வெளியிடாவிட்டால் வருகின்ற சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் கருப்பு கொடியேற்றும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என்றார்.

 

"இந்த தொகுதி எம்.எல்.ஏ. அமைச்சர் கருப்பணன்.  இவர்தான் சுற்றுச்சூழல் துறைக்கு அமைச்சர். தனது துறை பற்றி அடிப்படையான விஷயங்களை தெரியாத அமைச்சராக கருப்பனன் உள்ளார். சுதந்திர தினத்தில் கருப்புக்கொடி ஏற்றுவது அமைச்சரை கண்டித்தும்தான் " என்கிறார்கள் மக்கள்.

சார்ந்த செய்திகள்