கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், கடந்த வாரம் பிரசவ சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அந்த கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சர் வண்டியில் அமர வைத்து அழைத்து செல்வதற்கும், பிரசவ அறைக்குள் சென்று உணவு கொடுத்து வருவதற்கும் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து மருத்துவமனை ஊழியர்கள் இருவர் லஞ்சம் வாங்குவது தெரிய வந்தது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்ப்பிணி தாயின் குடும்பத்தினரிடம் பணம் பெறுவது, அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் உத்தரவிட்டார்.
மேலும் அவர், ''அரசு மருத்துவமனையில் எந்த ஒரு சேவைக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை. எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன், முழு உடல் பரிசோதனை உள்ளிட்ட சில சேவைகளுக்காக அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. இவற்றை தவிர மற்ற சேவைகளுக்காக யாரேனும் பணம் கேட்பது தெரிய வந்தால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.
சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்கள் இருந்தால், இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலருக்கு 94433 44422 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.