தேவாங்கர் கலை கல்லூரி மாணவிகளை தவறாக பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் சில முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி சீல் அகற்றப்பட்டது.
இதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாததால் வீடு பூட்டப்பட்டது. இதனிடையே நிர்மலா தேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த டிஎஸ்பி தனபால், ஆய்வாளர் பாலமுருகன், குற்றப்பிரிவு போலீசார் நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியை அழைத்து வீட்டில் ஏதேனும் திருடு போய்யுள்ளதா என சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் வீட்டில் கொள்ளையடிக்க வந்தது யார்? தடயங்கள், ஆதாரங்களை அழிக்க முயற்சியாக அவர்கள் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.