சமீப காலமாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் நெல்லையில் உள்ள ரயில் நிலையங்களில் உறவினர்களை காரில் விட வருபவர்களின் கார்கள் திருடு போவது, தொடர் சம்பவமாக இருந்து வந்தது. இது சம்மந்தமான புகார்கள் குறித்து ரயில்வே போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்த பரமசிவம் நேற்று முன்தினம் உறவினர் ஒருவரை சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி விடுவதற்காக அன்றைய தினம் மாலை கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு காரில் வந்தார். ரயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உறவினரையும் ரயிலில் அனுப்பிவிட்டு பரமசிவம் திரும்பி வந்து பார்க்கும் போது காரை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ரயில் நிலையம் மற்றும் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை நாகர்கோவில் ரயில் நிலைய வளாகத்தில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் இரண்டு நபர்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் கார்களை நோட்டமிட்டவாறு சுற்றி கொண்டியிருந்தனர். எதிர்பாராத விதமாக ரயில்வே போலீசாரை கண்ட அந்த இரண்டு பேரும் ஒட்டம் பிடித்தனர். உடனே அவர்களை பின் தொடர்ந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அந்த இரண்டு பேரும் தென்தாமரைக்குளத்தை சேர்ந்த அஜித் சார்லஸ்(21), மற்றும் சேர்மன்துரை(19) என்பதும் இருவரும் ரயில் நிலைய கார் திருடர்கள் என தெரியவந்தது. அவர்கள் குமரி நெல்லை ரயில் நிலையங்களில் சமீப காலமாக கார் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்கள் மீது பல கார் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் கூறினார்கள். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி கார் திருடர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.