சென்னை கொருக்குப்பேட்டையில் 50 ஆண்டுகால பழமையான கட்டடத்தை இடிக்கும்போது தளம் இடிந்து தொழிலாளர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் பலராமன். இவர் கொருக்குப்பேட்டையில் மீனாம்பாள் நகரில் உள்ள 50 ஆண்டுகால பழமையான சிதிலமடைந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடு வாங்கிய பலராமன் இரண்டு ஆண்டு காலம் ஆகியும் அங்கு புதிய வீடு கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, அந்த பழமையான வீடு இடியும் தருவாயும் இருந்ததால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி, அந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று பலராமனுக்கு உத்தரவிட்டது. இதனால், பலராமன் திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை அழைத்து கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் 2 தொழிலாளர்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தளம் இடிந்து அந்த கட்டடத்தில் சிக்கினர். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டனர். இதில் சின்னதம்பி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு தொழிலாளியான சுரேஷ் என்பவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரி ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.