புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் அம்புக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜீவா, உதயநிதி இருவரும் கரோனா கால விடுமுறையைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என எண்ணினர். அதற்கு அவர்களின் பெற்றோர்களும் சம்மதித்ததால், அதே ஊரில் உள்ள பிரபல நாதஸ்வர கலைஞர் இசைமணி சேகல் ரெங்கநாதன் என்பவரிடம் சென்று தங்களுக்கு நாதஸ்வரம் கற்றுக்கொடுங்கள் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்னர். அவரும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆர்வத்தைக் கண்டு இலவசமாகவே நாதஸ்வரம் இசையை கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.
அவரிடம் முறையாக நாதஸ்வரம் இசையைக் கற்றுக்கொண்ட மாணவர்கள், தங்களுடைய பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் முதல் முறையாக நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டியுள்ளனர். மாணவர்களின் திறமையைக் கண்ட விஜயபாஸ்கர், ரொக்கப் பணம் வழங்கி பாராட்டியுள்ளார். மாணவர்களின் திறமையை நேரில் கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, மாணவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அரசுப் பள்ளி மாணவர் ஜீவா கூறியதாவது; “என் அப்பா தனபால், தவில் வாசிக்கிறாங்க. சிறு வயது முதல் எனக்கு இசையின் மேல் ஓர் ஆர்வம் இருந்தது. தற்பொழுது கரோனா விடுமுறை என்பதால் விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று எண்ணிய என்னை, எனது விருப்பத்தின் பேரில் எங்கள் ஊரில் உள்ள நாதஸ்வர கலைஞர் இசைமணி சேகல் ரெங்கநாதன் அய்யாவிடம் நாதஸ்வர வகுப்பில் சேர்த்தாங்க. நானும் 6 மாதங்களாக நாதஸ்வரம் கத்துக்கிறேன். இதுவரை மூன்றுமுறை பொது இடங்களில் நாதஸ்வரம் வாசித்துள்ளேன். பள்ளியில் என் நண்பர்களுக்கு நான் நாதஸ்வரம் வாசிக்கும் விஷயம் தெரியும் என்றாலும், முதன்முதலாக பள்ளியில் நடைபெற்ற விழாவில்தான் எனது வாசிப்பைப் பார்த்தாங்க. ரொம்பப் பாராட்டினாங்க. எனக்கு வருங்காலத்தில் மியூசிக் டீச்சர் ஆகணும் என்ற ஆசை உள்ளது” என உற்சாகமாக கூறினார்.
மாணவர் உதயநிதி கூறியதாவது; “என் அப்பா கூலி வேலை செய்து வருகிறார். எனது தாத்தா இசைமணி சேகல் ரெங்கநாதன், நாதஸ்வர இசைக்கலைஞர் என்பதால் நான் சிறு வயது முதலே எனது தாத்தாவின் நாதஸ்வர இசையைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். தற்பொழுது கரோனா கால விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என எண்ணி, என் தந்தையிடம் நாதஸ்வர இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறினேன். அவரும் எனது விருப்பத்தை ஏற்று எனது தாத்தாவிடம் நாதஸ்வர இசை வகுப்பில் சேர்த்துவிட்டாங்க. எனது தாத்தா, எனக்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் நாதஸ்வர இசையைக் கற்றுக்கொடுத்தார். நானும் தொடர்ந்து 6 மாதம், முறையாக கற்றுக்கொண்டேன். எனக்கு நாதஸ்வரம் வாசிக்கும் பழக்கம் இருப்பது எனது வகுப்பாசிரியர்கள், மாணவர்கள் யாருக்கும் தெரியாது. முதல் முறையாக எங்கள் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சுவர் திறப்பு விழாவன்று அமைச்சர் முன்னிலையில் நாதஸ்வரம் இசையை வாசிக்கும்போது என்னிடம் இருந்த திறமை வெளியே வந்தது. அன்றைய தினம் என்னை விஜயபாஸ்கர் நேரில் அழைத்து ரொக்கப் பணம் வழங்கி பாராட்டிச் சென்றார். அன்றைய தினம் விழாவிற்கு வந்திருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல் விஜயலட்சுமியும் எங்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்கள். பள்ளியில் நான் நாதஸ்வரம் வாசிக்கும் விஷயம் தெரியவந்தவுடன் என் நண்பர்கள் ரொம்ப பாராட்டினாங்க. எனக்கும் வருங்காலத்துல மியூசிக் டீச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.