கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சுரேஷ், மணிமொழி தம்பதியின் மகள் சுபாஷினி(14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது தந்தை கொத்தனார் வேலை செய்பவர் மதுபழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தை கவனிப்பது இல்லை. இந்நிலையில் அவரது அம்மா பிள்ளைகளை வளர்ப்பதற்கு தெருவில் இட்லி கடை வைத்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் சுபாஷினி பள்ளி படிப்பை தாண்டி விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். அப்போது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயிற்சியாளர் சத்தியராஜ் மாணவர்களுக்கு கராத்தே சொல்லி கொடுக்கும்போது வேடிக்கை பார்த்த சுபாஷினியிடம் கராத்தே வகுப்பிற்கு வருகிறாயா என்றதும் அடுத்த நாளே கராத்தேவில் சேர்ந்து நல்லமுறையில் கற்று கருப்பு பெல்ட் வாங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியின் திறமையை அறிந்த பயிற்சியாளர் அவரை குத்துசண்டை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.அதிலும் நல்லமுறையில் பயின்று மாவட்ட அளவில் முதல் இடத்தில் வென்று பின்னர் 2017, 2018, 2019- ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான குத்து சண்டை போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதல் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குத்துசண்டை விளையாட்டில் நல்ல பெர்பாமான்ஸ் செய்கிறார். ஏழ்மை நிலையின் காரணமாக அவருக்கு சரியான சத்தான உணவு இல்லை. குத்து சண்டை விளையாட்டு பயிற்சியில் பயன்படுத்தப்படும் பல பொருட்களை அவர் இதுவரை பார்த்திருக்கமாட்டார். நான் சிலரிடம உதவி பெற்று என்னால் முடிந்த கையுறைகள் (GLOOVES) உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளேன்.
அவரது மன உறுதியால் தொடர்ந்து வெற்றி பெருகிறார். தற்போது முதல்வர் கோப்பை குத்துசண்டை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து தேசிய அளவில் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் கடுமையான பயிற்சி செய்ய வேண்டும். அதற்கான எந்த உபகரணமும் அவரிடம் இல்லை. இந்த ஏழை மாணவிக்கு உதவி செய்ய யாராவது இருந்த சொல்லுங்க என்று அவரது நண்பர் செந்தில்குமார் மூலம் கூறியுள்ளார் பயிற்சியாளர்.
இதனையறிந்த சீர்காழியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெக.சண்முகம் மற்றும் அவரது மகள் யாமினிஅழகுமலர் அவரது நண்பர்களிடம் இந்த தகவலை கூறியவுடன் சாருமதி, அனுபம்ஸ்ருதி இரு நண்பர்கள் மூலம் தலா 10 ஆயிரம் பெற்று சென்னையில் உள்ள நண்பர்கள் உதவியுடன் ரூ. 20, 300- க்கு குத்துசண்டைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அந்த மாணவிக்கு வழங்கினர். மேலும் சிலர் ட்ரைபுரூட், குத்துசண்டை ஜாக்கிட் என ரூ 5 ஆயிரத்தில் வாங்கி கொடுத்தனர். இது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருட்களை பெற்றுகொண்ட மாணவி இதிலுள்ள பல பொருட்களை நான் பார்த்தது கிடையாது என் நிலமை அறிந்து உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி கண்கலங்கினார். நான் ஒலிம்பி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெருவேன் என்றார். அப்போது இனி வரும் காலங்களில் நண்பர்களின் உதவியால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறினார் யாமினி.
மாணவின் அம்மா, "என் பிள்ளைக்கு சில நேரத்தில் ஷூ, சாக்ஸ் வாங்க காசு இருக்காது எங்க தெருக்களில் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் பயன்படுத்தியதை வாங்கி வந்து கொடுத்து பள்ளிக்கு அனுப்பியுள்ளேன். என் சத்து இருக்கும் வரை பிச்சை எடுத்தாவது அவ நினைத்ததை சாதிக்கும் வரை உறுதுணையாக இருப்பேன்" என்றார்.
யாமினிஅழகுமலர் அவரது கல்லூரி கால நண்பர்கள் அப்போதே பிறந்தநாள் உள்ளிட்ட எந்த நாட்களையும் கொண்டாட கூடாது. அதற்கு பதில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என எடுத்த முடிவின்படி தற்போது நல்லவேலைகளில் இருப்பதால் இதுபோன்று கூட்டுமுயற்சியில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.