திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் தோட்டத்து வீட்டிலிருந்து பல லட்சம் மதிப்பலான மது பாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் இருக்கும் அனுமந்தரான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் நிர்மலா. இவரது கணவர் இன்பராஜ், அனுமந்தரான் கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர். தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் பிரதமர் மேடு என்ற இடத்தில் உள்ள இவரது தோட்டத்து வீட்டில் மதுபானங்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஏ.டி.எஸ்.பி., எஸ்.பி., தனிப்பிரிவு போலீசார் மற்றும் திண்டுக்கல் தாலுகா போலீசார் ஆகியோர் இன்பராஜின் தோட்டத்து வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில், இன்பராஜ் தோட்டத்து வீட்டில் பாண்டிச்சேரியிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட மதுபானங்கள் மற்றும் டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் என மொத்தம் 11,500 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். சில்லறையில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்காக அதனை அவர் வாங்கி வைத்திருப்பார் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்முறையாக இவ்வளவு மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.