கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடர்ஹள்ளியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேந்திரன்(34). கூலித்தொழிலாளி. இவர், பிப்., 19ஆம் தேதி, சேலம் சரக காவல்துறை டிஐஜி உமாவிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கூறியுள்ளதாவது: என்னுடைய அக்கா, மகேஸ்வரி (40). கணவரால் கைவிடப்பட்ட அவர், என்னுடைய வீட்டில் வசித்து வந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்பவர், என்னுடைய அக்காவிடம் மலேசியாவில் அதிக சம்பளத்தில் வேலை இருக்கிறது. அங்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். அதன்பேரில், கடந்த மாதம் 4ஆம் தேதி, என்னையும், அக்காவையும் முகமது அலி சென்னைக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் முத்து என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் இருவரும் எங்களை சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மலேசியாவுக்கு என்னுடைய அக்காவை விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு, மகேஸ்வரி என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னை, முகமது அலியும், முத்துவும் சேர்ந்து மலேசியாவில் உள்ள அருள் என்பவரிடம் 7 ஆயிரம் ரிங்கிட்டுக்கு (இந்திய மதிப்பில் 1.26 லட்சம் ரூபாய்) விற்று விட்டனர். அருள் என்னை ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார். 9 பேர் கொண்ட அந்த குடும்பத்தினர் என்னை துன்புறுத்துகின்றனர். இனியும் என்னால் இங்கு இருக்க முடியாது. டிபார்ட்மென்டல் ஸ்டோரில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று ஆசை வார்த்தை கூறி, சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஏமாற்றி விட்டனர் என்று கூறி கதறி அழுதார்.
இது தொடர்பாக அருள் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, 7 ஆயிரம் ரிங்கிட் பணத்தைக் கொடுத்தால்தான் மகேஸ்வரியை விடுவிக்க முடியும் என்று கூறினார். என்னுடைய அக்காவை மலேசியாவுக்கு தந்திரமாக அழைத்துச் சென்று விற்பனை செய்த முகமது அலி, முத்து, அவரை விலைக்கு வாங்கிய அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மகேஸ்வரியை பத்திரமாக மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்தப் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரைக்கு, டிஐஜி உத்தரவிட்டார். அதன்பேரில் மத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.