Skip to main content

பெரியார் பற்றி புத்தகம்! பேராசிரியருக்கு பல்கலை. மெமோ! - ராமதாஸ் கண்டனம்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Book about Periyar! University to Professor. Memo! — Condemnation of Ramadoss

“தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? யாருடைய கையாளாக செயல்படுகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழக  நிர்வாகம்” என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தைப் பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள்  ஆகியவற்றைத்  தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அவர் பணியாற்றி வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இரா.சுப்பிரமணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த பழிவாங்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ள இரா.சுப்பிரமணி, அப்பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அத்துடன் பெரியார் பல்கலைக்கழக பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குனராகவும் அவர் உள்ளார். பெரியார் இருக்கையின் நோக்கமே தந்தைப் பெரியாரின் சாதனைகளை பரப்புவது தான். அந்த வகையில் தான் மக்கள் நலனுக்காகவும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவும் பெரியாரின் போராட்ட வரலாறுகளை அவர் தொகுதித்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு.

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பேராசிரியர் சுப்பிரமணிக்கு எதிரானது அல்ல; தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனும், அதன் பொறுப்பு பதிவாளர் தங்கவேல் ஆகியோர் பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினாவை எழுப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். இப்போது பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கத் துடிக்கின்றனர். பெரியார் பெயரிலான பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள்? என்ற ஐயம் எழுகிறது.

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாடுகளுக்கு காரணம் தமிழக அரசின் செயலற்ற தன்மை தான். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கடந்த ஜனவரி 9-ஆம் நாள் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அந்த ஆணையம் அதற்கு வழங்கப்பட்ட இரு மாத காலக்கெடுவுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தால், பல்கலைக்கழக துணைவேந்தரும், பதிவாளரும் தண்டிக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், 11 மாதங்கள் முடிந்தும் விசாரணையை முடிக்காததால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்பட்ட துணிச்சல் தான் இத்தகைய செயல்களை செய்யத் தூண்டியுள்ளது. அந்த வகையில் இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 13 வகையான முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணையை விரைவுபடுத்தி, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்