வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள கே.வி.குப்பம் பகுதியில் கடந்த 16ஆம் தேதி பாஜகவை சேர்ந்த பிரமுகர் விட்டல் குமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பாஜக பிரமுகர் கொலைக்கு திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பாலா சைட் தான் காரணம் என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் காட்பாடி நீதிமன்றத்தில் கமலதாசன், சந்தோஷ் குமார் ஆகிய இருவர் கொலை வழக்கு தொடர்பாக சற்று முன்னர் சரணடைந்துள்ளனர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.