தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் முழு முயற்சியை எடுத்து வருகிறார் தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு. சமீபத்தில் தமிழகம் முழுவதும் தமிழக காவல்துறையினர் நடத்திய ’டிஸ் ஆர்ம் ‘ எனும் ஆப்ரேசனில் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட பட்டா கத்திகள், கள்ளத்துப்பாக்கிகள், வெட்டறிவாள் உள்ளிட்ட ஏகப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், தமிழக காவல்துறை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்.
அந்த உத்தரவில், ‘’ கத்தி, அறிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்களையும் தயாரிக்கப்படும் இடங்களையும் கண்டறிய வேண்டும். கண்காணிக்கவும் வேண்டும். ஆயுதங்களை வாங்க வருபவர்களின் பெயர், முகவரி, ஃபோன் எண்கள் ஆகியவைகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் என்ன காரணங்களுக்காக இந்த ஆயுதங்கள் வாங்கப்படுகிறது? என்பதையும் பதிவு செய்ய வேண்டும். இதுதவிர, வீட்டு உபயோகம் மற்றும் விவசாயம் அல்லாத பிற காரணங்களுக்காக கத்தி, அறிவாள் உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆயுதங்கள் தயாரிக்கும் இடங்கள், பட்டறைகள், ஆயுதங்களை விற்கும் கடைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும். இதில் அவர்களுக்கு சிரமம் இருப்பின் அவர்களுக்கு போலீசார் உதவி செய்வர் ‘’ என்று சைலேந்திரபாபு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.