![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/OmwqaWpye7lMEdBuvIYFYul4wLSkbcBDCSr2vFT_xi8/1670307216/sites/default/files/inline-images/n222398.jpg)
சட்டமேதை அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கரின் உருவச்சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அம்பேத்கர் உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் விழா மேடையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “அம்பேத்கரின் பெருமைகளை பாஜக வெளியுலகத்திற்குக் கொண்டு வந்தது. 2014 இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அம்பேத்கர் பிறந்த வீடு எங்கே இருக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரின் சிலை மூடி வைக்கப்பட்டிருப்பது தலைகுனிவு ஏற்படுத்தும் விஷயமாகும். பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன்னுடைய புனித நூல் என்று சொல்லியே பதவியேற்றுக் கொண்டார். 2014-க்கு முன்பு அம்பேத்கர் பிறந்த வீடு என்பது இந்த உலகத்திற்கு தெரியாமல் இருந்தது. அது ஆக்கிரமிப்பில் இருந்தது.
அண்ணல் அம்பேத்கருடைய 125 ஆவது பிறந்த தினத்தை நமது மத்திய அரசு கொண்டாடியது. அந்த நேரத்தில் அவர் பிறந்த இடம் மற்றும் அம்பேத்கர் டெல்லியில் மறைந்த இடம் என இந்த இரண்டு இடங்களையும் புனரமைத்து மிகப் பெரிய மெமோரியல் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அம்பேத்கர் லண்டனில் படித்த வீடு, அதுவும் ஐடென்டிஃபிகேஷன் இல்லாமல் இருந்தது. அம்பேத்கர் மும்பையில் இருந்த இடம், அம்பேத்கர் தீட்சை எடுத்த நாக்பூர் என இந்த ஐந்து இடங்களையும் புனிதத் தலங்களாக அறிவித்து ஒரே வருடத்தில் மேம்படுத்தி இந்த நாட்டிற்கு அர்ப்பணித்த மாபெரும் தலைவர் மோடி'' என்றார்.