தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்த நாள் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சரை மாவட்ட எல்லையான அம்மைய நாயக்கனார் பிரிவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கட்சி பொறுப்பாளர்கள் ஐ.பெரியசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல் வரை வழிநடுக்களும் தொகுதி மக்களும் கட்சி பொறுப்பாளர்களும் மாலை, சால்வைகளை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகைக்கு வந்த அமைச்சருக்கு மாவட்ட அளவில் உள்ள ஆயிரக்கணக்கான கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் மாலை சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனைவி சுசிலா பெரியாமி மற்றும் அவரது மகளும், தொழிலதிபருமான இந்திரா துவாரகநாதன் கலந்துகொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்த இருவருக்கும் கோவில் கமிட்டியார்கள் சிறப்பு வரவேற்பு கொடுத்ததோடு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். அதன் பின்னர் கோவில் குருக்கள் இருவரையும் தங்கத்தேர் இழுக்கும் பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு தீப ஆராதனை காண்பித்த பின்பு தங்கத்தேரை இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுசிலா பெரியசாமி - அவரது மகள் இந்திரா துவாரகநாதன் ஆகியோர் தங்கதேர் இழுத்தபடி கோவிலை வளம் வந்தனர். அதன்பின்னர் பொதுமக்களுக்கு ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபாஷ் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் அன்ன தானமும் வழங்கினார்கள். துணை மேயர் ராஜப்பா மற்றும் இளைஞரணி மாணவரணி சார்பாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்களும் அன்னதானமும் வழங்கினார்கள். இதில் கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன் உள்பட இளைஞரணி, மாணவரணியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.