தமிழகத்தில் சென்னை - சேலம் இடையே பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் புதிதாக எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்காக தமிழக அரசு இத்திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியது.
இத்திட்டத்திற்காக விளை நிலங்கள் பெருமளவு கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மக்களிடம் கருத்து கேட்காமல் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது தவறு என்றும், இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் விரக்தி அடைந்த சேலத்தைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மேல்முறை செய்த மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மாநில அரசைக் கண்டித்தும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சனிக்கிழமை (ஜூன் 1) கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, மேல்முறையீட்டை திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறினர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு துடிக்கிறது. இதற்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு துணை போகிறது. விவசாயம் பாதிக்கும் என்பதால்தான் குஜராத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவில்லை. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் அத்திட்டத்தை கொண்டு வர துடிப்பது ஏன்?
தேர்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்த மாநிலம் என்பதால்தான் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்த சில நாள்களில் இந்த திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. விவசாயத்தைப் பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களால் தமிழகம், சோமாலியா நாடு போல் மாறி விடும். தமிழக மக்கள் அகதிகளாக வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றனர்.