கஜா புயல் தாக்கி 50 நாட்கள் கடந்தும்கூட முற்றிலும் பாதிக்கப்பட்ட கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட 100 கிராமங்களில் மக்கள் இயல்வு நிலைக்கு திரும்பவில்லை.
நவம்பர் 16-ம் தேதி அதிகாலை டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலை போல, 1952-ம் ஆண்டும் ஒரு புயல் தாக்கி ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அழித்துவிட்டு போய் இருக்கிறது. என்பதை புள்ளாண்விடுதி நாட்டுப் புறப் பாடகர் நடேசக்கோனார் என்ற கிராமத்து கவிஞர் பாடல் வரிகளாக எழுதிவைத்திருக்கிறார்.
அப்போதும் இதேபோல மணிக்கு 80 மைல் வேகத்தில் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள, பெயர் சொல்லப்படாத அந்தப் புயலின் கோரம் இன்றைய கஜாவின் கொடூரத்திற்கு சற்றும் குறைவில்லை. அப்படியே ஒன்றி வருகிறது.
நந்தன ஆண்டு கார்த்திகை மாதம் 15-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ... அந்தப் புயல் தாக்கியதாக பாடல் தொடங்குகிறது.
"மாங்காய் காய்ச்ச மரமெல்லாம் மலைமலையாய்ச் சாய்ஞ்சுதே
தேங்காய் காய்ச்ச மரமெல்லாம் தேருத்தேராச் சாய்ஞ்சுதே
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே பலாவும்வேம்பும் போச்சுதே
பாட்டன்வச்சுக் காய்ச்சுதே புளியந்தோப்பும் போச்சுதே.."
என்று பாடல் விரிவடைகிறது. மா மரம், தென்னை, பலா, புளியமரம், சவுக்கு, முருங்கை, வாழை, பனை, கருவை மரம், கரும்பங் கொல்லை, ஈச்சமரம், வேலா மரம் உள்ளிட்ட அத்தனை மரங்களும் சாய்ந்து விட்டதாக நடேசக்கோனார் எதுகை மோனையில் வரியமைத்துப் பாடியுள்ளார்.
"சோலையான சவுக்கெல்லாம் தூருத்தூராச் சாய்ஞ்சுதே
சாலைநீள மரமெல்லாம் சாருச்சாராய் சாய்ஞ்சுதே..."
என்று சொல்லி வரும் கவிஞர்.. பேசும் படக் கொட்டகை, ரயில் தண்டவாலம் அத்தனையும் போய்விட்டதாகவும், மறமடக்கி சந்தைக்கு போனவர் செத்தார். மாங்காடு தோட்டத்தில் காவல் காரரும் மடிந்தார். அம்மையாண்டி கண்டிக்குளத்தில் குருவிக்காரர்கள் 2 பேர் காணவில்லை. ஒட்டங்காட்டில் ரைஸ்மில் சுவரோரம் ஒன்டிய 10 பேரில் 9 பேர் மடிந்தனர் என்று அத்தனை அழிவுகளையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.
பழைய பதிவுகளை பார்க்கும் போது பாட்டன் வைத்த புளியமரங்களும் சாய்ந்தது என்ற வரிகள் அதற்கு முன்பு புளிய மரங்களை சாய்க்கும் புயலை அந்த மக்கள் கண்டதில்லை என்பதை காட்டுகிறது. அதன் பிறகு தற்போது அந்த கோரதாண்டவத்தை காணமுடிந்துள்ளது.
தென்னை, தேக்கு, வாழை, பலா என்று சரம் சரமாய் சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்ற வழியின்றி விழிபிதிங்கி இன்றும் நிற்கிறார்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கு மரம் அறுக்கும் நவீன இயந்திரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் எந்த விவசாயிக்கும் இதுவரை அரசு இயந்திரம் கிடைக்கவில்லை. வெட்டிய மரங்களை எங்கே கொண்டுபோய் கொட்டுவது எப்படி அழிப்பது என்று 80 சதவீதம் தோட்டங்களில் தென்னை மரங்கள் அப்படியே கிடக்கிறது.
50 நாட்களாகியும் இன்னும் விவசாயிகளுக்கு மரங்களுக்காண நிவாரணம் கிடைக்கவில்லை.
தென்னை மட்டுமின்றி பலா மரங்கள் ஆலங்குடி தொகுதி மக்களின் வாழ்வாதாரம். அந்த மரங்கள் அடியோடு சாய்ந்து கிடப்பதால் நிம்மதிய இழந்து நிற்கிறார்கள் விவசாயிகள். வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி, அணவயல், உள்ளிட்ட பல கிராமங்களில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு வீட்டிலும் அனைவரையும் பட்டதாரிகளாக ஆக்கி வாழ வைத்தது வாழை. ஆனால் ஒரு மணி நேரத்தில் அத்தனை வாழைகளும் தரைமட்டமானதால் அதேபோல உடைந்து நிற்கிறார்கள் விவசாயிகள். எப்படி மீண்டு எழுவோம் என்ற வார்த்தைகள் அவர்களிடம் வெளிப்படுகிறது.
தென்னை, தேக்கு, பலா என்று மரங்கள் அத்தனையும் தோட்டங்களில் வீழ்ந்து கிடப்பதால் அவற்றை வெட்டி அகற்ற முடியாமல் மறு விவசாயத்திற்கு விவசாயிகள் தயாராக முடியாமலும் தவிக்கின்றனர். ஆழ்குழாய் பாசனம் வந்து 30 வருடங்களாகிவிட்டது. ஆனால், அதற்காண மின்சாரம் இருந்தால் மட்டுமே விவசாயம். புயலின் தாக்கத்தால் மாவட்டம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்தது. மின்மாற்றிகளும் உடைந்தது. தற்போதுவரை வீடுகளுக்காண மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு இருந்தாலும் விவசாயத்திற்கான மின்சாரம் 50 சதவீதம் கூட வழங்கப்படவில்லை. அதனால் எஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் தங்கள் தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுக்கு மின்சாரம் கொண்டு செல்ல மின்கம்பம் ஏற்றவும், மின்கம்பி உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் ஏற்றவும், மின்கம்பங்களை நட மின் ஊழியர்கள் சம்பளம், உணவு என்று சராசரியாக ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி செலவு செய்து கொண்டு போன மின்சாரம் 50 சதவீதம். மற்ற 50 சதவீதம் மின்சாரம் கொண்டு செல்ல ஒவ்வொரு விவசாயியும் கையில் பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.
வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் நல்ல நிலையில் இருந்த தெருவிளக்குகளுக்கு இணைப்பு கொடுத்துவிட்டார்கள். அந்த விளக்குகள் இரவு பகலாக எரிகிறது. ஆனால், அனைத்து கிராமத்திலும் தெருவிளக்குகள் பொருத்தும் பணியை இன்னும் ஊராட்சி நிர்வாகங்கள் செய்ய தொடங்கவே இல்லை. அதனால் மின்சாரம் இருந்தாலும் அனைத்து சாலைகளும் இருளில் தான் உள்ளது.
வீடுகள், மரங்கள், விவசாயங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் கிடைக்கும் என்று அரசு அறிவித்தாலும் கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.17 லட்சம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் 1.10 லட்சம் பேருக்கே நிவாரணம் பொருட்கள் வழங்கி வருகிறார்க்ள. அதனால் ஒவ்வொரு கிராமத்திலும் நிவாரணப் பொருள் வழங்கும் நாளில் சாலை மறியல், முற்றுகை போன்ற போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த நிவாரணப் பொருட்களில் தார் பாய் இல்லை. வேட்டி சேலைகளும் பலருக்கு பொங்கலுக்கு அரசு வழங்கும் வேட்டி சேலைகளே உள்ளது. மேலும் வீடுகள் உடைந்தவர்கள், மரங்களை இழந்தவர்கள் நிவாரணத் தொகை வரும் என்று காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் 1952 புயலில் அத்தனை மரங்களை இழந்த எங்கள் முன்னோர் எங்களுக்காக மறுபடியும் மரங்களை வைத்து வளர்த்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதே போல கஜா புயலால் அனைத்து மரங்களையும் இழந்து நிர்கதியாக நிற்கிறோம். அடுத்த சந்ததிக்காக மீண்டும் மரங்களை நட வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் இழந்த மரங்களை மீட்டெடுப்போம் என்று அணவயல், சேந்தன்குடி உள்ளிட்ட அனைத்து கிராம இளைஞர்களும் பொது இடங்களில் புதிய மரங்கன்றுகளை நடும் பணியை தொடங்கி உள்ளனர். புளி, வேம்பு, புங்கன் போன்ற மரக் கன்றுகளுடன் ஆலமரம், அரச மரம் போன்ற மரங்களின் கிளைகளை நடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பல லட்சம் மரக்கன்றுகளை கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.
50 நாட்கள் கடந்தும்கூட கீரமங்கலம், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவில்லை. அவர்கள் மீண்டு வர விவசாயிகளுக்கு உதவியாக உடனடியாக மும்முனை மின்சாரமும் தோட்டங்களில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற நவீன இயந்திரங்களும் வழங்குவதுடன் அவற்றை அப்புறப்படுத்த உடனடியான நிவாரணமும் வழங்கினால் இன்னும் சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.