நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பழவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆழ்கடல் பகுதியில் அத்துமீறி வந்து காரைக்கால், நாகை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் சுருக்கு வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பழவேற்காடு பகுதி மீனவர்கள் எல்லை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரும் நடுக்கடலில் மோதிக்கொண்டனர்.
இதில் பயங்கர ஆயுதங்களால் நாகை மீனவர்கள் தாக்கியதில் பழவேற்காடு குணம்குப்பம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், பிரதாப், தினேஷ் ஆகிய மூன்று மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய விசைப்படகு மீனவர்கள் உள்ளூர் பகுதி மீனவர்களின் படகில் இருந்த மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த மூன்று மீனவர்களுக்கும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் பழவேற்காடு -பொன்னேரி இடையே செல்லும் சாலையில் அமர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சக மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசைப்படகில் வந்து மீன்பிடித்த மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.