ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர், 300 டன் எடையும் 96 அடி உயரமும் கொண்டது. பங்குனி உத்திரம் கொண்டாடும் வகையில் நடைபெறும் திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1ஆம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
அதேபோல் தமிழக காவல்துறை சார்பில் சுமார் 1,700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஆழித் தேரோட்டத்தை நடத்த தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இன்று காலை ஐந்து மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 7.30 மணி அளவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது. கீழத் தெருவில் தொடங்கி நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறும். ஆழித் தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.