ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினரான மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை எனக் கூறும் இந்த அறிக்கை, ஜெயலலிதா மயக்கமடைந்த பின்னர் அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 561 பக்கம் உள்ள இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய கருத்துக்களை முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரின் பதில் பொறுப்பற்ற வகையில் இருப்பதாக அவர் யாரைக் கருதினாரோ அவர்களை தன்னுடைய வார்த்தைகளால் நையப் புடைத்துள்ளார். குறிப்பாக அப்போதைய சுகாதாரத்துறை செயலாளரிடம் நீங்கள் ஏன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கேட்டபோது அவரின் பதில் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கேள்விக்கு “அவ்வாறு அழைத்துச் சென்றால் இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்துவது போல் இருக்கும்” என்று அவர் கூறினார். கால்நடை மருத்துவரான அவரை தகுதியின் அடிப்படையில் அவரை மருத்துவர் என்று கூறாமல் இருப்பதே உகந்தது என்று காட்டமாக தன்னுடைய அறிக்கையில் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.