மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களைtத் திரும்பப் பெறக் கோரி, திண்டுக்கல்லில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்ததால், தரையில் படுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மாவட்ட அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அஞ்சலி ரவுண்டானா பகுதியில் இருந்து அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது, போலீசார் அவர்களை தடுப்புகளை வைத்துத் தடுத்து, போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று எச்சரித்தனர். தாங்கள் காத்திருப்புப் போராட்டம் மட்டுமே நடத்தச் செல்வதாகக் கூறினர். இருந்தபோதும், போலீசார் அவர்களை அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசாரை மீறி கலெக்டர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர்.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர், பஸ்களின் அடியில் சென்றும், சுவர்களின் மீது ஏறியும், போலீசாருக்கு எதிராகக் கோஷமிட்டனர். அது மட்டுமல்லாமல், தரையில் படுத்தும் போலீசாருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
அதுபோல் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியையும் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கியும் இழுத்துச் சென்றும் கைதுசெய்தனர். அதைக்கண்டு டென்ஷன் அடைந்த ஏனைய நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதுபோல், சில பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இதில், சச்சிதானந்தம் பாண்டி பெருமாள், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் செல்வராகவன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அப்போதும் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனர்.