கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையைத் தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம் நிறுத்திக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக பச்சை நிற பாக்கெட் பாலைவிட 1 சதவீதம் கொழுப்புச் சத்து குறைவான ஊதா நிற பாக்கெட் விற்பனையை அதிகரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். இதற்குத் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஆவின், விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனம் அல்ல. அது அதிகாரத்தின் கைக்கூலிகள் உள்ளே இருக்கக்கூடிய இடம்.
தனியார் பால் நிறுவனங்களுக்கும் ஆவினுக்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் தனியார் பால் விலைக்கும் ஆவின் பால் விலைக்கும் ஒரு தொடர்பு இருக்கும். ஆவினில் பால் விலை குறைந்தால், தனியார் பால் நிறுவனங்களும் விலையைக் குறைக்கும். பாலில் உள்ள கொழுப்பு சத்து ஏன் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வண்ண நிற ஆவின் பால் பாக்கெட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.