பழனி முருகன் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட ரோப்கார் சேவை மீண்டும் இயக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ரோப் கார் சேவையை மீண்டும் தொடங்குவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் ரோப்கார் சேவை கடந்த 19.08.2023 முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று நாளை 08.10.2023 முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளது என்ற விபரம் பக்தர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.