உருட்டுக்கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா? என முதல்வர் எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தாமிர உருக்காலை தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியாக நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். போராட்டத்தில் சமூகவிரோதிகள், விஷக்கிருமிகள் இல்லை என்பதால் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு என்ன அனுமதியெல்லாம் தரப்பட்டதோ அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனிமேல் ஆலை மீண்டும் இயங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது.
மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்களே தவிர மக்கள் அல்ல. உருட்டுக்கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா?. போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது என அவர் கூறினார்.