கள்ளக்குறிச்சி அருகே செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜித் ஆகியோர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் இன்று (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும், பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.