விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செல்போன் திருடிய நபர் சென்னை உயர்நீதிமன்றம் அருகே போலீசாரால் துரத்தப்படும் பரபரப்பு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 11 செல்போன்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதில் ஒன்று ஐஃபோன். மருத்துவரின் விடுதிக்குச் சென்ற மர்ம நபர் ஐஃபோனை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக மருத்துவர் காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். மேலும் ஐஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டாலும் இருப்பிடத்தைக் காட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல்போன் இருப்பிடத்தைத் தெரிவித்துள்ளார். உடனடியாக விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செல்போன் எங்கே செல்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்து வந்தனர்.
தொடர்ந்து சென்னை பர்மா பஜார் அருகே செல்போன் இருப்பதை அந்த தொழில்நுட்ப வசதி காட்டியது. விழுப்புரத்தில் திருடப்பட்ட செல்போனை சென்னை பர்மா பஜாரில் விற்பதற்காகத் திருடன் முடிவெடுத்திருக்கலாம் என அந்த பகுதியில் இருக்கும் போலீசாருக்கு விழுப்புரம் போலீசார் தகவல் அளித்தனர். தகவலைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பிரேம்குமார் மற்றும் முதல் நிலை காவலர் வசந்த் என்ற இருவரும் சாதாரண உடையில் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி போலீசார் சொன்ன அடையாளங்களை வைத்து ஒரு இளைஞரை பின்தொடர்ந்து சென்றதில் அந்த நபர் செல்போனை திருடியது தெரியவந்தது. உடனே திருடப்பட்ட செல்போன்கள் இருந்த பையை சாலையில் போட்டுவிட்டு ஓடி இருக்கிறார் அந்த நபர். உதவி ஆய்வாளர் பிரேம்குமார் அந்த நபரை தொடர்ந்து விரட்டிச் சென்றார். போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் காவலர்கள் இருவரும் ஓடிச்சென்று அந்தத் திருடனைப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் மேகநாதன் என்பதும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த இவர் மீது சென்னை மட்டுமல்லாது பல மாவட்டங்களில் வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தற்பொழுது அந்த நபரிடம் இருந்து 11 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.