ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன் மற்றும் 14- வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கக்கோரி, தமிழகம் முழுவதும் மூன்று நாட்களாக தொடர்ந்து அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், அலுவலகம் செல்வோர், வெளியூர் செல்வோர் எனப் பல தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில், ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர் மற்றும் தொழிற்சங்கத்தினருக்கு இடையே இன்று (27/02/2021) பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள அரசுப் பேருந்து ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர், புதிதாக அமையவுள்ள ஆட்சியில் எங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்து நிறைவேற்ற வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றநிலையில், அரசுப் பேருந்து ஊழியர்கள் இன்று இரவுக்குள் பணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.