அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பூஜா என்ற பெண், சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் வேலை செய்தார். அவர் சென்னையில் இருந்து தனது ஊருக்கு வந்த பிறகு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது இவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
![p](http://image.nakkheeran.in/cdn/farfuture/NJU2GKpYsuJuPVtk9fgvHSlQO4VHMfCR9zCWYPKftgg/1587213346/sites/default/files/inline-images/pooja1_0.jpg)
இதையடுத்து செந்துறையை சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. மேற்படி இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா தனி சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் தற்போது கரோனா நோய் பற்றிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் நோய்த்தொற்று முற்றிலும் நீங்கி இருவரும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/hewJ2FqakpFsIwNJwYGVe5noXWzvzOoXJ_XGpMNVC7w/1587214119/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_190.gif)
இதையடுத்து அவர்கள் இருவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இன்று பூஜா என்ற பெண் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் புறப்படும் போது, அவருக்கு டாக்டர்கள் கைதட்டி உற்சாகம் அளித்து அனுப்பி வைத்தனர். அப்போது டிக் டாக் மூலம் பேசிய பூஜா, யாருக்கும் கரோனா நோய் பற்றிய பயம் வேண்டாம். நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, தனிமையில் சிகிச்சையில் இருக்கும்போது தைரியமாக இருக்க வேண்டும். உறவினர்கள் யாரையும் பார்க்க முடியாவிட்டாலும் செல்போன் மூலம் அவர்களிடம் பேசி தைரியத்தையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு முன்பு நான் அதிகமாக டிக்டாக் செயலி மூலம் நிறைய பேசி வெளியிட்டுள்ளேன், இனிமேல் அதுபோல் செய்வதில்லை. இந்த கரோனா நோயிலிருந்து விடுதலை பெற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று கூறிவிட்டு அவரது ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நோய் பாதிப்பிலிருந்து மீண்டுவந்துள்ளவர்கள் வீடுகளுக்குச் சென்றாலும், தொடர்ந்து தனிமையை கடைபிடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறி அனுப்பியுள்ளனர்.