அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமம் ஊரைச் சேர்ந்த பிரபாகரன் (27). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கும் பொன்பரப்பிகிராமம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ஊமத்துரை மகள் கார்த்திகாவிற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள், சண்டைகள், பிரச்சினைகள் இருந்துள்ளன. உறவினர்கள் அவ்வப்போது இருவரையும் சமரசம் பேசி சேர்த்து வைத்தும், இவர்களுக்குள் சச்சரவுகள் தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில், நேற்று பிரபாகரன் வீட்டில் கார்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஊமைத்துரைக்கு தகவல் வந்தது. பிரபாகரன் உறவினர்கள் மற்றும் ஊமத்துரை உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். கார்த்திகாவின் உடலை பார்த்து கதறி அழுத அவர்கள் "கார்த்திகா தற்கொலை செய்து கொள்ளவில்லை, பிரபாகரன் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார்" என்று கூறி கோபம் அடைந்த அவர்கள் பிரபாகரன் வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.
இந்த சம்பவம் பற்றி செந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி திருமேனி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் கார்த்திகாவின் உடலை மினி டெம்போவில் பொன்பரப்பி தூக்கி செல்ல அவரது உறவினர்களின் முயற்சி செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கார்த்திகா மரணம் கொலையா? தற்கொலையா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என்கிறது காவல்துறை, இதற்கிடையே திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் மணப்பெண் மரணமடைந்தால் இந்த மரணத்தைப்பற்றி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை செய்யப்படும். அதன்படி உடையார்பாளையம் கோட்டாட்சியர் விரைவில் விசாரணை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.