Skip to main content

சிமெண்ட் ஆலைகளால் உருக்குலையும் அரியலூர்- ஆலையை மூட வேண்டும் என  ஐ.நா.வில் வலியுறுத்தல்!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

அரியலூர் மாவட்டத்தில் கடல்குதிரை, டைனோசர், நண்டு, நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை பாசில் படிமங்கள் நிறைந்துள்ளது. அதனைக் காப்பாற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் சிமெண்ட் ஆலைகளை விரிவுபடுத்துவதிலேயே ஆலை நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றது. இதனால் ஆலை நிறுவனங்கள் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டதே தவிர மாவட்ட மக்களின் நிலையோ அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. 

 

Ariyalur with cement plant


மேலும் தென்னக இரயில்வே துறை அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் சிமெண்ட் மூட்டைகளை சரக்கு ரயில் பரிவர்த்தனை மூலம் 1000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் மாவட்டத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருகிறது. மிக குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து நிலங்களை வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டனர். தற்போது விவசாயிகள் பலரும் தங்களது கிராமத்தை விட்டு வேறு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் அவல நிலைக்கு காரணமான சிமெண்ட் ஆலைகளை எதிர்த்து சட்டப் போராட்டங்கள், தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில் அண்மையில் அரியலூர் மாவட்ட அவல நிலை குறித்து ஐ.நா. சபையில் தென்றல் என்ற அமைப்பு குரல் எழுப்பி உள்ளது. ஐ.நாவில் ஒலித்த அரியலூர் மாவட்டத்தின் சிமெண்ட் ஆலை பாதிப்புகள் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கூறியுள்ள கருத்துகள் சிமெண்ட் ஆலைகளை நிரந்தரமாக மூடச் சொல்லி இந்திய அரசாங்கத்திற்கு ஐநா மன்றம் அழுத்தம் தரவேண்டும் என்று கோரிக்கையை தென்றல் அமைப்பு சார்பாக வலியுறுத்தி உள்ளனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளால் மக்கள் அடையும் சுகாதார கேடுகள் கேன்சர், நுரையீரல் நோய் பாதிப்பு, ஆஸ்துமா அலர்ஜி நோய் என தினசரி நோயாளிகளாக பொதுமக்கள் விவசாயிகள் என அவதியுறுவதை பதிவு செய்துள்ளது.

 

Ariyalur with cement plant


சிமெண்ட் ஆலைகள் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடிநீர் மட்டம் திட்டமிட்டே அழிப்பதனால் அரியலூர் மாவட்ட  விவசாயிகள் தங்களது போர்வெல் இயங்காமல் விவசாயம் செய்ய இயலாத நிலை உருவாகிறது. கால்நடைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சிமெண்ட் ஆலைகள் திறந்து விடும் புகைகள் அரியலூரின் வீடுகளில் வீழ் படிவாக படிந்து விடுகிறது. ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிப்பு, சிமெண்ட் ஆலைகள் இயக்கும் கனரக வாகனங்களால் அன்றாடம் நடைபெறும் விபத்துகளால் மக்கள் படும் துயர் என தொடர்கதையாகி வருகிறது. எனவே அரியலூரில் இயங்கும் சிமெண்ட் ஆலைகளை நிரந்தரமாக மூட இந்திய அரசுக்கு ஐ.நா. சபை வலியுறுத்த வேண்டும் என தென்றல் அமைப்பு மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து போராடும் அமைப்புகளிடம் கேட்டபோது செந்துறையைச் சேர்ந்த அருள் மொழி வர்மன் கூறுகையில், சிமெண்ட் ஆலைகளால் மக்களுக்கு நன்மை என்பது துளி கூட இல்லை. மேலும் இவர்கள் ஆங்காங்கே நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்தும் வருகின்றனர். அதிகாரிகள் எத்தனை எச்சரிக்கை செய்தாலும் அரியலூர் மாவட்ட மக்களை நாடு கடத்தவே விரும்புகின்றனர் என்றார். இயற்கை ஆர்வலர் தமிழ்க்களம் இளவரசனிடம் கேட்டபோது விளை நிலங்களை அழித்துவிட்டீர்கள் இனி கால்நடைகள் எங்கு செல்லும் வேறு மாவட்டத்திலிருந்து தீவனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலை உருவாகிவிட்டது. மேலும் விளை நிலங்களை குறைவான விலைக்கு வாங்கி அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி ஆலை நிர்வாகம் இன்று விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர். நிலங்களை விவசாயிகள் வைத்திருந்தால் சிறு தானியம், மல்லி, நிலக்கடலை, முந்திரி, துவரை, மிளகாய் உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கு பெயர் பெற்ற அரியலூர் மாவட்டம் இன்று அண்டை மாவட்டங்களில் கையேந்த வைத்துவிட்டது என்றார். 

 

Ariyalur with cement plant


செந்துறை சேகர் கூறுகையில், நிலத்தடி நீரை உறிஞ்சி குடி நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இயல்பான சுவையான நல்ல தண்ணீர் முழுக்க உப்பு நீராகி கிராம மக்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தண்ணீரை விலை கொடுத்து பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.   

செட்டித்திருக்கோணம் ராஜா கூறுகையில், சிமெண்ட் ஆலையை இயக்குவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்து இரசாயன கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வேலையைச் செய்கிறது என்றார். 

இது குறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் 'தங்க சண்முக சுந்தரம்' கூறுகையில், பாரம்பரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டுமானம் செய்த கட்டிடங்கள் பல நூறு ஆண்டுகளைத் தாண்டி கம்பீரமாக நிற்கிறது. அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. எனவே இனி சிமெண்ட் பயன்படுத்தாத பாரம்பரிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்து அரியலூர் மாவட்ட மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுங்கள் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார். மேலும் சிறுதானிய உற்பத்தியில் முன்னிலை வகித்த மாவட்டத்தை மீட்க நடவடிக்கை வேண்டும். இல்லையெனில் அரியலூர் மாவட்டம் ஏற்கெனவே 30 ஆண்டுகளில் அழிந்து விடும் என புவியியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தது நிஜமாகிவிடும்.கடல்நீர் உட்புகும் சூழல் உருவாகிவிடும் என்றார். மேலும் புவியியல் ஆய்வின் மெக்கா என அழைக்கப்படும் அரியலூரை ஆய்வு செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரியலூரில் அரிய வகை டைனோசர் போன்ற உயிரினங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது, முழுமையாக ஆய்வு நடத்தும் போது இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்