பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள். பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனது 2-வது மகளான 3 மாத கைக்குழந்தை பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக, குழந்தையுடன் பெரம்பலூருக்கு, வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு அரசு பஸ்சில் ஏறி வந்தேன். பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தபோது, பஸ்சில் நினைவற்ற நிலையில் நான் இருந்தேன். பின்னர் சுயநினைவு எனக்கு வந்தபோது, மடியில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தை பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை என கூறினார்.
அந்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் யாரையாவது தெரியுமா என்று போலீசார் கேட்டுள்ளனர். சம்பவத்தன்று பஸ்ஸில் டிரைவர், கண்டெக்டராக இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். மேலும் சிலரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
பின்னர் கோவிந்தம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியது தெரிய வந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையை வல்லாபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசி கொன்று விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் குழந்தையை தூக்கி வீசியதாக அவர் கூறிய கிணற்றுக்கு போலீசார் சென்றனர். அப்போது கிணற்றில் பார்த்தபோது குழந்தை மிதந்தது. இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொன்றதற்கு காரணம் என்ன என்பது குறித்து கோவிந்தம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், பிச்சைபிள்ளை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக இருந்ததால் அதன் விரத்தியில் கோவிந்தம்மாள் இப்படி செய்ததாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.