கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி புஷ்பநாதன்
கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
ஆலை காலனி பகுதியை சேர்ந்த நேதாஜி, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில், ஆடுகளை திருடி, அந்த பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு ஆடுகளை தன்னுடைய கசாப்பு கடைக்காக வாங்கி வந்த புஷ்பநாதனிடம் திருடப்பட்டு வந்த ஆடுகளை தொடர்ந்து விற்று வந்தனர். இந்நிலையில் நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேரும் தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் எட்டு ஆடுகளை திருடியுள்ளனர். இது குறித்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தோஷ், அஜய், நேதாஜி
ஆடு திருட அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்களிடமிருந்து ஆடுகளை வாங்கிய புஷ்பநாதன் தங்கள் 3 பேரையும் ஜாமீன் எடுப்பார், வாகனத்தையும் போலீசிடம் இருந்து மீட்டர் தருவார் என மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் புஷ்பநாதன் அவ்வாறு செய்யாததால் புஷ்பநாதனுக்கும் மூன்று இளைஞர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவர்கள் இது குறித்து புஷ்பநாதனை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையிலிருந்த மூன்று பேரும் புஷ்பநாதனை வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது