செல்ஃபி எடுக்க முயன்றவரின் மொபைல்போனை தட்டிவிட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகப் பரவியது. அதில், ஒரு தனியார் மருத்துவமனை துவக்கவிழாவில் பங்கேற்க வந்த நடிகர் சிவக்குமார், கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் தன்னையும் சேர்த்து தன் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுக்க முயல, கோபம் கொண்டு அந்த ஃபோனை தட்டிவிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவ, சிவக்குமார் மீது கடும் விமர்சனங்களும் அவரை கிண்டல் செய்து எக்கச்சக்கமான மீம்ஸ்களும் உருவாகின. இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த நடிகர் சிவக்குமார் கூறியது...
"நீங்கள், உங்கள் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு சென்று செல்ஃபி எடுப்பது என்பது பர்சனல் விஷயம். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஒரு பொது இடத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொள்ளும் விழாவுக்குப் போகும்போது காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு போகும் முன்பு பாதுகாப்புக்குச் செல்லும் ஆட்கள் உட்பட அனைவரையும் தள்ளிவிட்டு ஒரு 25 பேர் செல்போனைக் கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் சார் என்று யாரையும் நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயம்?
ஒரு வார்த்தை அனுமதி கூட கேட்காமல் படம்பிடிப்பது என்ன நியாயம்? எத்தனையோ ஆயிரம் பேருடன் ஏர்போர்ட்டிலும் திருமண விழாக்களிலும் செல்போனில் போஸ் கொடுத்திருக்கிறேன். அது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் , இன்று நடந்தது அப்படியல்ல. பிரபலம் என்றாலும் நானும் மனிதன்தான். நான் புத்தன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் ஹீரோதான். அதே சமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.” எனக்கூறினார்.
இந்நிலையில் செல்ஃபி எடுக்க முயன்றவரின் மொபைல்போனை தட்டிவிட்ட சம்பவம் தொடர்பாக நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.