மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.33 அடியாக உயர்ந்தது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் நிரம்பி வழிந்தன. இதைடுத்து அவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்குக் காவிரியில் வினாடிக்கு 2.35 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தமிழகத்தின் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கும் வினாடிக்கு 2.39 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 13ம் தேதி திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆயிரம் கன அடியும், அதன் பிறகு அன்று மாலையே வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாகவும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்திற்காகவும் 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்பட்ட மறுநாளே, கர்நாடகாவில் மழைப்பொழிவு குறைந்ததால், தமிழகத்திற்கு நீர் வரத்தும் குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஒருபுறம் நீர்வரத்து குறைந்தாலும், நீர்மட்டம் 110.33 அடியாக உயர்ந்தது. இதே அளவு நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், இன்னும் மூன்று நாள்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.