ஒப்பந்தக் காலம் நிறைவடைந்த பிறகும், இரு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்குத் தடைகோரியும் ஜோசப் சகாயராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (08/04/2021) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது விசாரித்த நீதிபதிகள், "தமிழக சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை. அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. சுங்கச்சாவடி கட்டண வசூலிப்பில் தேசிய அளவிலான கொள்கையைப் பின்பற்ற வேண்டும். ஃபாஸ்டேக் பெறும் நடைமுறை சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலையை வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்றவேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்தனர்.