சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஜாக்) கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவகுருநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; “அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அரசு ஏற்று 10 ஆண்டுகளாகியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நியாயமான சலுகைகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள், பணப்பயன்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் அளிக்கப்பட வேண்டிய அனைத்து பணப்பயன்களும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதுவரை 4 கட்டப் போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால், இது வரை எங்களது நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர்கள் உள்ளனர். எங்களது கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
வருகின்ற 29, 30 ஆகிய இரு தினங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், ஊழியர்கள் கோரிக்கைகளுடன் கூடிய கருப்பு அட்டை அணிந்து பணியாற்றுவது என்றும், வருகின்ற டிசம்பர் மாதம் 7ம் தேதி மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்தவும், டிசம்பர் மாதம் 14ம் தேதி கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றக் கோரி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தவும், டிசம்பர் மாதம் 28ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனப் பேரணியாக சென்று சிதம்பரம் உதவி ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவும், வரும் ஜனவரி 23ம் தேதி அனைத்து கட்சி மற்றும் அனைத்து தொழிற்சங்க தலைவர்களுடன் ஒருங்கிணைந்து மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திடவும் முடிவு செய்துள்ளோம்.
அப்படியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகின்ற ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளோம் என்றார். கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.மனோகரன், ஏ.ஜி.மனோகர், ஏ.ரவி, பேராசிரியர்கள் இளங்கோ, பாஸ்கர், பல்கலைக்கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.