தோஹாவில் நடந்த ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 5 கோடி தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு பாரதிய ஜனதா கட்சி மாநில பிரச்சார அணி செயலாளர் ராஜரத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து செய்திக்கு பிறகு நாட்டின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டிய அவருக்கு ஊக்கமூட்டும் விதமாக பரிசு அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்.
இதுவரை அறிவிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைக்கும் இந்த அறிவிப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பாராட்டுக்களை காலம்கடந்து செய்வதில் எந்த பயனும் இல்லை. இந்திய பிரதமர் மோடிக்கும் பாஜக சார்பில் இன்று கடிதம் எழுதியுள்ளேன். ஒரு விவசாய கூலி தொழிலாளியின் மகள், பேருந்து வசதியல்லாத குக்கிராமம் அவருக்கு ஊட்டச்சத்து கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்.
இவ்வளவு சூழ்நிலையிலும் தன் திறமையை நிருபித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் பரிசுகளை வாரி வழுங்கும் அரசுகள் தட கள வீரர்களுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆதலால் மத்திய, மாநில அரசுகள் தலா 5 கோடி பரிசு தொகை அளித்து கோமதி மாரிமுத்துவை கௌரவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா சார்பில் கேட்டு கொண்டுள்ளார்.