எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, இன்று (ஜூலை 5, 2018) மாலை 3.45 மணிக்கு சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் கடந்த ஜூன் 19ம் தேதியன்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சென்னை - சேலம் எட்டுவழி பசுமைச்சாலைக்கு நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர்களின் அழைப்பின்பேரில் இயற்கை பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், இதழியல் மாணவியுமான வளர்மதி (24), அங்கு சென்று விவசாயிகளிடம் பரப்புரை செய்தார்.
அப்போது அவர், ''நிலம் நம்முடைய உரிமை. அதை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது. அரசாங்கம் அராஜகமான முறையில் நிலத்தை பிடுங்குகிறது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஓரணியில் ஒன்றுதிரள வேண்டும்,'' என்று பேசினார்.
இதையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, கலகம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அவர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு பட விழாவில், ''காவல்துறையினர் தாக்கினால் நாமும் திருப்பித் தாக்குவோம்,'' என்று வளர்மதி பேசியிருந்தார். காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது சில நாள்களுக்கு முன்பு புதிதாக ஒரு வழக்கையும் காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இவ்விரு வழக்குகளிலும் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு விடுதலை ஆகி வெளியே வந்தார்.
சிறை வாசல் முன்பு நின்றபடி அவரும், அவருடைய சக தோழர்களும், ''எதிர்ப்போம் எதிர்ப்போம்... நாசகார திட்டங்களை எதிர்ப்போம் எதிர்ப்போம்...'', ''அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம் அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் அஞ்சமாட்டோம்,'' என்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வளர்மதி கூறுகையில், ''மக்களிடம் பேசியதற்காகவே என்னை கைது செய்துள்ளனர். இதை அரசின் தொடர்ச்சியான அடக்குமுறையாகவே பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக விவசாய நிலத்தையும், இயற்கையையும், வாழ்வாதாரத்தையும் அழித்து, அனைத்து மக்களின் எதிர்ப்பையும் மீறித்தான் எட்டுவழிச்சாலை திட்டத்தை கொண்டு வருகின்றனர்.
இந்த திட்டத்துக்கு மக்கள் தானாக முன்வந்து நிலம் கொடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி அப்பட்டமாக பொய் சொல்கிறார். தற்கொலை பண்ணிக்கிறோம் என்று நிலத்தைக் கொடுக்காமல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடணும்.
மக்கள் முன்னால் போய் நின்றாலே கைது என்ற அடக்குமுறை எங்கள் மீது இருந்தாலும்கூட, தொடர்ச்சியாக எங்கள் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும். எல்லா மக்களையும் போய் நேரில் சந்திப்பேன். அது எங்கள் சொந்தங்கள் உள்ள பகுதி. நிச்சயமாக எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்,'' என்றார் வளர்மதி.
வளர்மதி மீது சென்னை வடபழனி மற்றும் சேலம் வீராணம் ஆகிய இரண்டு காவல்நிலையங்களும் வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை வழக்கு தொடர்பாக அவர் தினமும் காலை 10 மணிக்கு வடபழனி காவல்நிலையத்திலும், சேலம் வழக்கில் அவர் தினமும் காலை 10.30 மணிக்கு வீராணம் காவல் நிலையத்திலும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றங்கள் நிபந்தனை விதித்துள்ளது. ஒரே ஆள் ஓரே நேரத்தில் சேலம், சென்னையில் ஆஜராக வேண்டிய விந்தையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.