அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, “அண்ணாமலை கர்நாடகாவில் தோல்வியை சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், ‘பாஜக மற்றும் அதன் அதிகாரம் குறித்து இன்னும் 10 நாட்களில் செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வார்’ எனப் பேசினார். இது மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்தில், ‘அமலாக்கத்துறை தற்போது பிசியாக உள்ளது. அந்த பிஸியை எல்லாம் முடித்துவிட்டு செந்தில் பாலாஜிக்கு ரெயிடு வருவார்கள்’ என பகிரங்கமாக சொன்னார்.
செந்தில் பாலாஜியை குறி வைக்க காரணம், கோவை மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி கனிசமான இடங்களைப் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து இந்தப் பகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100க்கு 100 திமுக வெற்றி பெற்றது. ஆகவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவரின் முந்தைய பேச்சுக்களே உதாரணமாக காட்ட முடியும். முதலமைச்சர் இங்கு இல்லாதபோது இப்படியான காரியங்களை செய்வது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.