ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கோர்பா - விசாகா விரைவு ரயிலின் காலி பெட்டியில் இன்று (04.08.2024) காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் மற்ற பெட்டிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே தெரிவித்துள்ளது விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வால்டேர் பிரிவு ரயில் வே பொது மேலாளர் சவுரப் பிரசாத் கூறுகையில், “இந்த ரயில் பராமரிப்புக்காக ரயில் பணிமனைக்குச் செல்ல ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. காலை 09:20 மணிக்கு நடைமேடைகளில் ரோந்து வந்த ஆர்.பி.எப்., ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்டதைக் கவனித்தனர். அப்போது அங்குச் சிறிது நேரம் புகை மூட்டமாகக் காணப்பட்டதால் அவர்களும் தீயணைப்புப் படையினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காலை 11.10 மணியளவில் தீயை அணைத்தனர். இதற்கிடையே ரயிலின் மீதமுள்ள பெட்டிகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு ரயில் பணிமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ஒரு விரிவான விசாரணையை நடத்துவோம். இந்த விபத்துக்குக் காரணமான பி7 கோச்சில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.