பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை : ’’ஊதிய உயர்வு, மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 5 அரசு மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
இந்திய மருத்துவக் குழுவின் ஆணைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை 4டி-2 என்ற எண் அரசாணையின் மூலம் குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்; அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் ஆகியவை தான் சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கையாகும். அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் இப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் இப்போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நான்காவது நாளாக இன்றும் உண்ணாநிலை போராட்டம் நீடிப்பதால், மருத்துவர்களின் உடல்நிலை நலிவடைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.
அரசு மருத்துவர்களின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது ஆகும். தமிழக அரசின் அரசாணை எண் 4டி &2 பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு வரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கை 7253 ஆக இருந்தது. இந்திய மருத்துவக் குழு அறிவுரைப்படி கடந்த பிப்ரவரி 15&ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை பிறப்பித்த அரசாணையின்படி இந்த எண்ணிக்கை 6886 ஆக குறைக்கப்பட்டது. ஒரு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தால், அதனுடன் இணைந்த மருத்துவமனையில் 360 படுக்கைகள் இருந்தால் போதுமானது. ஆனால், தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 100 மாணவர் சேர்க்கை இடங்களுக்கு 800 படுக்கைகள் வரை உள்ளன. அனைத்து மக்களுக்கு மருத்துவம் வழங்க வேண்டும் என்ற கோணத்தில் பார்க்கும் போது இது மிகவும் சரியானது; பாராட்டத்தக்கது. ஆனால், அதற்கு இணையாக மருத்துவர்கள் நியமனம் செய்யப்படாததால், மருத்துவர்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில், இருக்கும் மருத்துவர் பணியிடங்களையும் குறைப்பது சரியாக இருக்காது. இது ஏழை நோயாளிகளை கடுமையாக பாதிக்கும்.
அதேபோல், அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு வேண்டும் என்பது நீண்டகாலமாக வலியுறுத்தப் பட்டு வரும் கோரிக்கை ஆகும். அண்மையில் மருத்துவர்கள் குறித்த வேறு ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘ நீதிபதிகளின் உதவியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைவான ஊதியம் தான் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட துணை ஆட்சியர் போன்ற முதல் தொகுதி அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதற்கு இணையான ஊதியம் அரசு மருத்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்திருந்தது. மத்திய அரசு மருத்துவர்களுக்கும், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் இடையிலான ஊதிய விகிதத்தில் பெரும் இடைவெளி இருப்பதை அறிவேன். இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை; இதை அரசு ஏற்க வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு இந்திய மருத்துவக் குழு ஆணைப்படி ரத்து செய்யப்பட்டதும், அதை மீண்டும் பெற தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அனைவரும் அறிவார்கள். பறிக்கப்பட்ட 50% இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
தமிழக அரசு மருத்துவர்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதம் 10, 11 ஆகிய தேதிகளில், மக்களுக்கான மருத்துவ சேவை பாதிக்காத வகையில் மண்டல அளவில் அடையாள உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை அரசு மருத்துவர்கள் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது மருத்துவர்களின் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக நாளை (27.08.2019) செவ்வாய்க் கிழமை அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும் அரசு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வது நோயாளிகளை கடுமையாக பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் சாகும்வரை உண்ணாநிலையை முடிவுக்கு கொண்டு வரவும், நாளைய வேலைநிறுத்தத்தை தவிர்க்கும் வகையிலும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.’’