கூட்டுறவு தேர்தல் - வேட்பு மனு தாக்கல் விவகாரத்தில் ஆளும் கட்சி அராஜகம் அதிகமாக உள்ளது என சி.பி.ஐ.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதுமுள்ள 18775 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடத்திட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் 12.3.2018 அன்று துவங்கி 28.4.2018 வரை நான்கு நிலையில் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் 4698 சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் 26.3.2018 அன்று துவங்கியது. வாக்காளர் பட்டியல் வெளியிடுவதிலேயே பெரும் குளறுபடி நடைபெற்றுள்ளது. கூட்டுறவு சங்கங்களிலிருந்து போட்டியிடக் கூடிய அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய வேட்பு மனு படிவங்கள் ஆளும் கட்சியினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால் வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு இடங்களில் தள்ளுமுள்ளு, தடியடி, மறியல், சங்கங்கள் முன்பான போராட்டம் என மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் உள்ளது. நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனையின் போது அதிகாரிகள் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலகத்திற்கு வராமல் காலம் கடத்தியுள்ளனர்.
வேட்புமனு பரிசீலனையிலும் ஆளும் கட்சியினர் குறிப்பிடும் வேட்பு மனுக்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு செய்து இதர மனுக்களை நிராகரித்துள்ளனர். வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை எழுத்துப் பூர்வமாக வழங்காமல் கையெழுத்து சரியில்லை என்பது போன்ற சொத்தை காரணங்களை கூறி வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளனர். பெரும்பாலான சங்கங்களின் தேர்தல் அதிகாரிகள் வரவில்லை, அப்படி வந்தவர்களும் 3 மணி அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர் எனக் கூறி சென்று விட்டனர். மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வித முயற்சியும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவு கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் சுமை எனக் கூறி தேர்தல் நடத்தாமல் ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதுபோன்று கூட்டுறவு சங்க அதிகாரிகளின் நடத்தை, கூட்டுறவு தேர்தல் தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணானது.
சுதந்திரமான மற்றும் முறையான தேர்தல் நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு மாறாக ஆளும் கட்சியினர் நடத்தும் அராஜகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் உடந்தையாகயிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எவ்வித ஜனநாயகத்திற்கும் இடமளிக்காமல் அராஜக முறையில் தேர்தல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது. ஆட்சேபணை எழுப்பப்பட்டுள்ள இடங்களில் மறு தேர்தல் தேதி அறிவித்து ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.