நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்தியா கூட்டணியில் ஏற்படும் குழப்பங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ''இதெல்லாம் தேர்தல் நேரத்தில் நடக்கின்ற திருவிளையாடல்கள் தான். ஒருவர் ஒரு கட்சியில் இருப்பார். திடீரென்று வேறொரு கட்சிக்கு போயிருப்பார். இது மாதிரி திடீர் திடீர் செய்திகள் வரும். இதையெல்லாம் எதிர்பார்த்து தான் கூட்டணி அமைக்கிறோம், தேர்தலை சந்திக்கிறோம். ஆகையால் இவையெல்லாம் புதுசல்ல எங்களுக்கு பழசுதான்.
தேர்தல் அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கவே இல்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகளில் இப்பொழுது தான் இரண்டு கட்சிகள் வந்து பேசிவிட்டு போயிருக்கிறார்கள். மறுபடியும் வருகிறோம் என்று சொல்லிவிட்டு போகிறார்கள். காங்கிரஸ் மட்டும் தான் வந்திருக்கிறது. அரசியலில் ஒரு தேர்தலில் எங்களை எதிர்த்து நின்றவர் அடுத்த தேர்தலில் எங்கள் அணிக்கு வந்திருப்பார்கள். அப்பொழுது பேசிய விமர்சன பேச்சு பேச்சோடு போகும். அதை இப்போது தூக்கி வைத்து பேசுவது ஆண்மை இல்லாத தன்மை. பொலிட்டிக்கல் இன் பேலன்ஸ். இறுதி முடிவுக்கு பிறகுதான் இந்தியா கூட்டணியில் யார் யார் இருப்பார்கள், யார் யார் போவார்கள் என்று தெரியும்'' என்றார்.