கரோனா காலம்.. நடுத்தர மற்றும் கூலி வேலைக்கு செல்லும் அடித்தள மக்கள் வாழ்வியலை படுபாதாளத்தில் தள்ளி விட்டது. ஊரடங்கு பொது முடக்கம். ஒட்டப் பந்தைய வீரனின் கால்களை உடைத்து போட்டது போல் என்றென்றும் உழைக்கும் வர்க்கமான தொழிலாளிகளை முழுமையாக முடக்கி விட்டது.
குறிப்பாக ஈரோடு மாவட்டம் கரும்பு, மஞ்சள், நெல் என விவசாயமும், கைத்தறி, விசைத்தறி என ஜவுளி உற்பத்தியும் செய்யப்படும் பகுதி. ஈரோட்டில் ஜவுளி சந்தையும், மஞ்சள் மார்கெட்டும் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. அப்படிப்பட்ட இந்த தொழில்களில் நேரடியாகவும் மறைக்க மாகவும் பத்து லட்சம் பேர் ஈடுபட்டு அதன் மூலம் வாழ்கிறார்கள். இதில் எட்டு லட்சம் பேர் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள். இத்தொழில்களில் ஈடுபட்டு அன்றாடம் கிடைக்கும் உழைப்பின் ஊதியத்தால் குடும்ப வறுமையை போக்குபவர்கள்.
இப்போது அவர்கள் சொல்லவொன்னா துயரத்தில் உள்ளார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் மட்டுமே கிடைத்தது. அ.தி.மு.க.வின் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. தென்னரசு, மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம் ஆகிய இருவரும் அரசு கொடுத்த சில உதவிகளை தாங்களே நேரடியாக கொடுப்பதுபோல புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு போக இந்த ஈரோட்டில், அந்த அ.தி.மு.க.வில் உள்ள ஒரு நிர்வாகி மட்டும் தன் சொந்த பணத்தை செலவழித்து தினம்தோறும் மக்களுக்கு தேவையானதை கொடுத்து வருகிறார் என்றால் அது விந்தையான செய்திதான் ஆனால் அதுவே உண்மை.
அ.தி.மு.க.வின் ஈரோடு மாநகர செயலாளராக சில காலமும், மாநகராட்சி மண்டல தலைவராகவும், இப்போது பகுதி செயலாளராக இருப்பவர் பெரியார்நகர் மனோகரன் இவர்தான் மக்கள் பணியில் அர்பணிப்போடு ஈடுபட்டு வருகிறார்.
கட்சி பணம் கொடுக்கும், அரசு செய்யும் என்று எதையும் எதிர்பாராமல் இந்த 40 நாட்களும் ஒவ்வொரு நாளும் காலை, பிற்பகல், மாலை என மூன்று வேளையும் சுமார் 10 தன்னார்வலர்களை வைத்து சாலையில் ஆதரவற்று இருக்கும் பொதுமக்கள் முதல் கரோனாவை விரட்ட உறுதுணையாக இருக்கும் காவலர்கள் வரை மூலிகை சூப் கொடுப்பதோடு, மதியம், இரவு என இரண்டு வேலையும் கூலி தொழிலாளர்கள் வீடுகளுக்கே சென்று உணவு வழங்குகிறார். அதே போல் ஒவ்வொரு வீட்டுக்கும் 10 கிலோ அரிசி மளிகை பொருட்கள் என பாரபட்சமின்றி வழங்கி வருகிறார். அதேபோல் ஈரோடு நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள் எல்லோருக்கும் பேண்ட், சர்ட், சேலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் என பலவற்றை வழங்கி வருகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருத்தாலும் மக்களுக்கு கொடுக்க மனம் இல்லை ஆனால் பெரிய பதவிகள் எதையும் வகிக்காமல் மக்களுக்கு உதவிகள் இந்த பெரியார்நகர் மனோகரன் போன்ற சிலரால்தான் அடித்தள மக்கள் அ.தி.மு.க.வில் ஒரு வித ஈர்ப்போடு இருக்கிறார்கள் என வெளிப்படையாக கூறுகிறார்கள் ஈரோடு ர.ர.க்கள்.