மத்திய அரசின் கல்விக் கொள்கைளில் உள்ள சரத்துக்கள் மாற்றப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி கோரிக்கைக்ளை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு கருத்துக் கேட்போம் என்று சொல்லிவிட்டு இருந்தாலும் தமிழக அரசு மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ராஜாவை மிஞ்சிய விசுவாசம் காட்டி வருகிறது.
நீட் என்ற அரக்கனை கொண்டு வந்து அனிதா தொடங்கி அடுத்தடுத்து மாணவர்களின் உயிர்களை குடித்தாலும் இன்னும் திருந்தவில்லை. அடுத்து இந்தி திணிப்பு. அடுத்து பள்ளிகளை இணைப்பது என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து மாவட்டத்திற்கு சில பள்ளிகளை தேர்வு செய்து முன்மாதிரி பள்ளிகள் என்று பெயரிட்டு நடத்தி வருகிறார்கள். இதனால் கிராமங்கள் தோறும் பள்ளிகள் இருக்காது. பழைய காலம் போல பல கி.மீ தள்ளி ஒரு பள்ளி இருக்கும். அங்கே விரும்பினால் சென்று படிக்கலாம். 5, 8 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முறை. இந்த முறையால் பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
காந்தி திருவிழா என்று விடுமுறை நாட்களிலும் வகுப்புகள். விடுமுறையிலும் மன அழுத்தம் குறைக்க முடியாமல் மன சுமையை அதிகம் ஏற்றிக் கொள்ள வழிவகுக்கும்.
அடுத்த அதிரடியாக.. 16 ந் தேதி கையெழுத்திட்டு 17 ந் தேதி மாலை வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அறிக்கை மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அதாவது அரசுப் பள்ளிகளில் தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாங்கள் விரும்பினால் பாடம் நடத்தலாம், சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம் அதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி தேவையில்லை. பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதித்தால் போதும் வகுப்புகள் எடுக்கலாம் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதனால் எந்த நடக்கும் என்ற நமது கேள்விக்கு ஆசிரியர்கள் கூறும் போது.. இதனால் நடக்க கூடாதது எல்லாம் நடக்கும் என்றவர்கள். தற்காப்பு பயிற்சி முதல் பாடங்கள் வரை நல்லா நடத்துவோம் என்று வருவார்கள். அவர்களை தலைமை ஆசிரியர்கள் அனுமதித்தே தீரவேண்டும். அப்படி அனுமதி அளிக்கும் போது அவர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துவார்களா அல்லது வேறு ஏதாவது பயிற்சிகள் நடத்துவார்களா என்பது தெரியாது. அவர்களை தடுக்கவும் முடியாது. தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் வேறு பயிற்சிகள் கூட நடத்தலாம். வெளியே ஒரு மாணவிக்கு டார்ச்சர் கொடுக்கும் ஒரு இளைஞர் கூட நான் பாடம் நடத்துவேன் என்று பள்ளிக்குள் வந்து தொடர்ந்து மாணவிகளுக்கு டார்ச்சர் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இவர்களுக்கு பெயர் சூப்பர் ஹீரோ. தொடர்ந்து 5 ஆண்டுகள் பயிற்சி அளித்துவிட்டால் அதே பள்ளியில் அவர்களை ஒப்பந்த பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுவார்கள்.
அதாவது மத்திய அரசிக் கல்விக் கொள்கையில் இப்படியான அம்சங்கள் உள்ளது. அதனால்தான் வேண்டாம் என்று கருத்து சொல்லியும் போராட்டம் நடத்தியும் வருகிறார்கள். மத்திய அரசு இந்த திட்டங்களை அறிவித்ததோ இல்லையோ தன்னுடை ராஜவிசுவாசத்தை காட்ட தமிழக அரசு முந்திக் கொண்டு மாணவர்களிடம் திணிக்கிறார்கள். இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தியே காலத்தை வீணாக்குவதால் தேர்ச்சி விகிதம் குறையும். தேர்ச்சி விகிதம் குறைவதால் பழைய படியே மாணவர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி பள்ளிக்கு செல்வதை தடை செய்வதுடன் பள்ளி செல்லாக்குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது படித்தால் வேலை கேட்பார்கள் அதனால் அடிப்படையிலேயே படிக்கவிடாமல் செய்துவிட்டால் வேலை கேட்க வரமாட்டார்கள் அல்லவா என்கிறார்கள்.
இன்றும், நாளையும் அடுத்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.