சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தொகுதிக்கான 10 கோரிகைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.
சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை படி சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் மிக முக்கிய அவசியமான பத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பலசுப்பிரமணியத்திடம் வழங்கினார்.
அந்த கடிதத்தில்,''சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கொள்ளிட கரையோர கிராமங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரத்தைச் சேமிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், மீனவர்கள் நலன் கருதி சாமியார்பேட்டை பகுதியில் தூண்டில் வளைவு ஏற்படுத்திட வேண்டும், சிதம்பரம் பகுதியை தலைமை இடமாக கொண்டு வருவாய் மாவட்டம் அமைத்திட வேண்டும், சிதம்பரம் பகுதியில் முதலைப்பண்ணை அமைக்க வேண்டும், சிதம்பரம் பகுதியில் மகளிருக்கு என்று தனியாக ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும், சிதம்பரம் பகுதியில் தில்லையம்மன் ஓடை, ஞானப்பிரகாசம் குளம், நாகசேரி குளம், ஓமக்குளம், தச்சன் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குளக்கரையில் சுமார் 50 ஆண்டுகளாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்பில் வீடுகள் இடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி தர வேண்டும், கொள்ளிட கரையோர கிராமங்களான வீரன்கோவில் திட்டு, சின்ன காரைமேடு, பெரிய காரை மேடு கிராமங்களில் மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனை தடுக்கும் வகையில் கரை அமைத்துத் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
கொள்ளிடம் கரையோர கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கிட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து விடுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சுமார் 14 கிமீ சுற்றளவு கொண்ட கரைபகுதியை பலப்படுத்திப் பாதுகாப்பு சுவர் ஏற்படுத்தித் தர வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் இடது கரை கிராமங்களான கருப்பூர் முதல் கொடியம்பாளையம் வரை சுமார் 30 கிமீ சாலை சேதமடைந்து போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த கொள்ளிடக்கரை சாலையை சீரமைத்து தர வேண்டும், நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வெளியேற்றும் தண்ணீர் வலாஜா ஏரி மூலம் வெளியேற்றப்படுகிறது. இந்த ஏரியை ஒட்டியுள்ள மானம்பாத்தான் வாய்க்காலில் ஒரு ரெகுலேட்டர் அமைத்து என்எல்சி தண்ணீர் கிடைக்கச் செய்தால் பூவாலை, அலமேலுமங்காபுரம், மணிக்கொல்லை உட்பட 15 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்படும்' இவ்வாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.