![AIADMK DMK executive's cars collide](http://image.nakkheeran.in/cdn/farfuture/kTCtsNe-NIQxCPVzkVwiOCfy9wNKv7OTA2lK4zaxoeo/1671377377/sites/default/files/2022-12/n222581.jpg)
![AIADMK DMK executive's cars collide](http://image.nakkheeran.in/cdn/farfuture/mPnx6rra_7MIIVEBOSg4bPWfnPVzH5EfOVBk_GTB72k/1671377377/sites/default/files/2022-12/n222583.jpg)
![AIADMK DMK executive's cars collide](http://image.nakkheeran.in/cdn/farfuture/lvRadHCdS3V7g8JwReE4KftLz_Sf2KRViWqlYc9Ec6c/1671377377/sites/default/files/2022-12/n222582.jpg)
தஞ்சையில் அதிமுக திமுக நிர்வாகி கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் குறிஞ்சி நகர், தி.மு.க. மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ஷேக் முகமது (60), ஊரணிபுரம் தி.மு.க நகரச் செயலாளர் சஞ்சய் காந்தி (45), மேலும் ராஜா, ரமேஷ், புதுவிடுதி சுந்தர் (45) ஆகிய 5 பேரும் ஒரு காரில் தஞ்சாவூர் சென்றுள்ளனர்.
அதேநேரம் மன்னார்குடி அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் மணிகண்டன், கூட்டுறவுச் சங்கத் தலைவர் வைத்தியநாதன், செல்லப்பாண்டியன், கௌதமன் ஆகிய 4 பேரும் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் தஞ்சை சென்றுள்ளனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு ருக்மணி கார்டன் அருகே இரு கார்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது. சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மருத்துவக்கல்லூரி காவல்நிலைய போலீசார், வல்லம் டிஎஸ்பி ஆகியோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டுவந்து பார்த்தபோது திமுக தஞ்சை மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ஷேக் முகமது (60), ஊரணிபுரம் திமுக நகரச் செயலாளர் சஞ்சய்காந்தி (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது.
காரில் வந்து காயமடைந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் உள்பட 7 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.